மாமல்லபுரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக 35 பன்றிகள் பிடிப்பு; பேரூராட்சி நடவடிக்கை


மாமல்லபுரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக 35 பன்றிகள் பிடிப்பு; பேரூராட்சி நடவடிக்கை
x

மாமல்லபுரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக 35 பன்றிகளை பிடித்து பேரூராட்சி நடவடிக்கை எடுத்தது.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்கள் அதிகம் உடைய சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள காட்டுநாயக்கன் குடியிருப்பு பகுதியில் சிலர் இறைச்சி தேவைக்காக பன்றிகள் வளர்க்கின்றனர். இவர்கள் வளர்க்கும் பன்றிகள் அண்ணாநகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி, ஐந்துரதம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன சின்ன பகுதிகள், வராக பெருமாள் கோவில் வளாகம், சிற்ப வளாகங்கள், கடற்கரை பகுதிகள் என முக்கிய இடங்களில் கூட்டம், கூட்டமாக திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ் உத்தரவின்பேரில் பேரூராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் அந்த பன்றிகளை வாகனங்கள் மூலம் பிடித்து கொண்டு வந்தனர். காட்டுநாயக்கன் பகுதியை சேர்ந்த பன்றி வளர்ப்போர் சிலர் கூட்டமாக வந்து தங்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் எப்படி எங்கள் பன்றிகளை பிடிக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த வாகனத்தை சுற்றி நின்று தங்கள் பன்றிகளை மீட்டு செல்ல முயன்றனர். பிடிக்கப்பட்ட பன்றிகளை திருப்பி ஒப்படைக்க முடியாது என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். பிறகு மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் பன்றியுடன் கூடிய அந்த வாகனத்தை போலீசார் உதவியுடன் அங்கிருந்து எடுத்து சென்றனர். பின்னர் 35 பன்றிகளை திருப்போரூர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.


Next Story