பக்தர்களின் வசதிக்காக 350 சிறப்பு பஸ்கள்
பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் வருகிற 5-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒருபுறம் அலைஅலையாக பக்தர்கள் பாதயாத்திரையாக பழனியை நோக்கி வருகைதர, மற்றொரு புறம் வாகனங்களில் வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவுக்கு ஒருசில நாட்களே இருப்பதால் பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே பக்தர்கள் வெளியூர்களில் இருந்து பழனிக்கு வருவதற்கும், பழனியில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கும் வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
350 சிறப்பு பஸ்கள்
அதன்படி திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பழனியில் இருந்து அந்த ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தம் 350 சிறப்பு பஸ்கள் வருகிற 5-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில், அதற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் பக்தர்களுக்கு உதவும் வகையில் பஸ் நிலையங்களில் வழிகாட்டி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.