இந்தியாவில் வெறிநாய் கடியால் ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் சாவு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தகவல்


இந்தியாவில் வெறிநாய் கடியால் ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் சாவு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தகவல்
x

இந்தியாவில் வெறிநாய் கடியால் ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்று குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்தியாவில் வெறிநாய் கடியால் ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்று குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.

நாய் தொல்லை

குமரி மாவட்டத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இரவில் தெருநாய்கள் படுத்தும் பாடுக்கு அளவே இல்லை. இவ்வாறு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பலரை கடிப்பதும், விரட்டுவதும் நாள்தோறும் நடைபெறும் சம்பவங்களாக இருந்து வருகின்றன. இதனால் நாய்களால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் அந்த குறிப்பிட்ட நாட்களில் அரசு மருத்துவமனைகளுக்கோ, தனியார் மருத்துவமனைகளுக்கோ சென்று ரேபீஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

35 ஆயிரம் பேர் இறப்பு

உலகில் "குணப்படுத்தவே முடியாது... நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்" என்று கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் "ரேபீஸ்" தான். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அதேவேளையில் இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவீதம் உண்மை.

இந்தியாவில் முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவீதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை "வெறிநாய்க்கடி நோய்" என்கிறோம்.

தடுப்பூசி கட்டாயம்

இதுதவிர சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது, இதைத் தொடர்ந்து காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.

நாய்க்கடிக்கு நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவீதம் வர விடாமல் தடுத்துவிடலாம். நாய் கடித்த அன்றே இச்சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். நாய் கடித்த நாள், 3-வது நாள், 7-வது நாள், 28-வது நாள் என 4 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால் 5-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாகவே போடப்படுகிறது. முதல் மூன்று தடுப்பூசிகள் நாய் கடித்த 10 நாட்களுக்குள் உரிய இடைவெளியில் போடப்பட்டால் மட்டுமே சிகிச்சை உரிய பலன் தரும்.வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதற்கு ரேபீஸ் தடுப்பூசியை கண்டிப்பாகப் போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story