36 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு


36 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு
x

வாகன மறுவிற்பனை கடையில் 36 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,


வாகன மறுவிற்பனை கடையில் 36 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகனம் வாங்கியதில் தகராறு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளம் ஏ.டி.ஆர். நகரில் வசித்து வருபவர் பழனிகுமார் (வயது 36). இவர் ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மறுவிற்பனை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த சந்தனகுமார் (25) என்பவர் 17.12.2022-ல் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி உள்ளார்.

அந்த வாகனத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும் என 23.4.2023 அன்று பழனிகுமாரிடம் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் சந்தனகுமாரும், அவருடைய நண்பர் மதனகுமாரும் (20) சேர்ந்து பழனிகுமார் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

தீ வைப்பு

பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவில் ஆலங்குளம், டி.என்.சி. முக்கு ரோட்டில் உள்ள பழனிகுமாரின் கடைக்கு சென்று அங்கு நிறுத்திவைக்கப்பட்டு உள்ள 36 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் அனைத்து வாகனமும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து பழனிகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனகுமார், மதனகுமார் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story