போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய 36 பிச்சைக்காரர்கள்
போலீசாரின் அதிரடி வேட்டையில் 36 பிச்சைக்காரர்கள் சிக்கினர்.
பொதுமக்களுக்கு இடையூறு
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பவர்கள் மீதும், சாலையில் அனுமதியின்றி கார் கண்ணாடிகளை சோப்புநீர் கொண்டு சுத்தம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநகரில் சாலையோரம், பாலங்களின் கீழ் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
36 பேர் மீட்பு
இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் நேற்று அம்மாமண்டபம், ஜங்ஷன், சத்திரம் பஸ் நிலையம், காந்திமார்க்கெட், மத்திய பஸ் நிலையம், தலைமை தபால்நிலையம் சிக்னல், ஒத்தக்கடை சிக்னல் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். அங்கு ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்து வந்த வயதானவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுடைய விவரங்களை எழுதி வாங்கி கொண்ட போலீசார், அனைவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாநகர் முழுவதும் நேற்று மட்டும் 36 பேர் மீட்கப்பட்டனர். இதேபோல் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடியாக பிச்சை எடுத்து வந்தவர்களையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.