ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேர் வீடுகளில் 37½ பவுன் நகை திருட்டு
மங்கலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேரின் வீடுகளில் 37½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர்.
மங்கலம் அருகே ஒரே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேரின் வீடுகளில் 37½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். அவர்கள் மிளகாய் பொடி டப்பாவையும் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகில் உள்ள கருமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு வெளியூர் சென்று இருந்தார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 36 பவுன் நகை, 800 கிராம் வெள்ளி, ரூ.1500-யை திருடி கொண்டு சென்று உள்ளனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் ஏழுமலையின் மகள் மற்றும் உறவினர்கள் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி அதே பகுதியில் உள்ள மணிமுத்து என்பவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைந்து கை வரிசையை காண்பித்து உள்ளனர். அந்த வீட்டில் 1½ பவுன் திருடப்பட்டு உள்ளது.
மிளகாய் பொடி டப்பா
மேலும் அந்த பகுதியில் மற்றொரு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் திருட எந்த பொருட்களும் கிடைக்காததால், அங்கிருந்த மிளகாய் பொடி டப்பாவை தூக்கி சென்று உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் மற்றொரு வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து உள்ளனர். அந்த வீட்டில் இருந்த மூதாட்டி திருடர்களை பார்த்து சத்தம் போட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் திருட்டு நடைபெற்ற வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.