சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 38 கிலோ வெள்ளி பறிமுதல்
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உரி ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 38 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
சூரமங்கலம்:
சோதனை
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் தலைமையில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து நடைமேடைக்கு ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சூட்கேஸ் மற்றும் பையுடன் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் பையை பாதுகாப்பு படையினர் திறந்து சோதனை நடத்தினர். அதில் 38 கிலோ வெள்ளி ஆபரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 74 ஆயிரம் ஆகும். மேலும் வெங்கடாஜலபதியிடம் வெள்ளி ஆபரணங்களுக்கான தகுந்த ஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்து 38 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒப்படைப்பு
மேலும் விசாரணையில் வெள்ளி ஆபரணங்களை வெங்கடாஜலபதி கர்நாடக மாநிலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த வெள்ளி ஆபரணங்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் சேலம் வணிக வரி துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.