38 வகை நீர்ப்பறவை இனங்கள்


நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறையினரின் கணக்கெடுப்பில் 38 புதிய வகை நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல்

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வனத்துறையினர், பறவையின ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்திலும் நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த பணியில் வனத்துறையினர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். முதல்நாளில் ஜேடர்பாளையம், இடும்பன்குளம், தூசூர், வேட்டாம்பாடி, பருத்திப்பள்ளி உள்ளிட்ட 11 ஏரி பகுதிகளிலும், தும்பல்பட்டி, புதுச்சத்திரம், கோனேரிப்பட்டி, பருத்திப்பள்ளி, நாச்சிபுதூர் உள்ளிட்ட 18 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

38 புதிய நீர்ப்பறவை இனங்கள்

இந்த கணக்கெடுப்பு பணி குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஊசிவால் வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, கிளுவை, மஞ்சக்கால் கொக உள்ளான், மண்கொத்தி, ஆற்று மண்கொத்தி, காட்டு கீச்சான், சாம்பல் கொக்கு, நத்தை குத்தி நாரை, சங்குவளை நாரை, பவளக்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகள் பதிவாகி உள்ளன. இதுதவிர வெளிநாட்டு பறவை இனங்களான ஆசியன் ஓப்பன்பில், மார்ஸ் சண்டுபைபர் உள்ளிட்ட பறவை இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன.

மொத்தமாக 18 ஏரிகளிலும் 110 வகைகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்து உள்ளது. அதில் 1,600 பறவைகள் மட்டுமே பதிவாகி உள்ளன. குறிப்பாக 38 புதிய வகை நீர்ப்பறவை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை நன்றாக இருந்ததால் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், பறவை இனங்களின் வரத்து அதிகரித்து உள்ளது.


Next Story