நீலகிரியில் 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை


நீலகிரியில் 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை
x
தினத்தந்தி 26 July 2023 7:30 PM GMT (Updated: 26 July 2023 7:30 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெருநாய்கள் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்புபவர்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துகின்றன. இதனால் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

நீலகிரியை பொருத்தவரை தெரு நாய் கடிக்கு மட்டும் அரசு ஆஸ்பத்திரியில் மாதம்தோறும் 100 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருத்தடை

இதைத்தொடர்ந்து தற்போது ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டியில் நேற்று ஒரே நாளில் 16 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்வதற்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சியில் மட்டும் 1,000 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டியில் கடந்த 6 மாதத்தில் இதுவரை 126 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் இதற்கு முன்னர் ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.740 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.1040 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொண்டு நிறுவனம் மூலம் தான் நாய்க்கு கருத்தடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் இதுவரை 3,879 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. நாய்கள் எந்த இடத்தில் பிடிக்கப்பட்டதோ, மீண்டும் அதே இடத்தில் விட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செலவு தொகை

இதற்கிடையே தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் தொகையை உள்ளாட்சி நிர்வாகங்கள் தாமதப்படுத்துவதால், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் தாமதப்படுத்தாமல் இந்த தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story