கோவையில் 2 வழித்தடங்களில் 39 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்
கோவையில் 2 வழித்தடங்களில் 39 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்
கோவை
கோவையில் முதற்கட்டமாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கோவை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தலைமை தாங்கினார். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பின்னர் மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சார்பில் கோவை மாநகரில் ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த மெட்ரோ ரெயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இந்த திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வருகிற 15-ந் தேதி சமர்ப்பிக்கப்படும். ஆரம்பத்தில் அவினாசி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு ஆகிய 4 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
39 கிலோ மீட்டர் தூரம்
தற்போது முதற்கட்டமாக அவினாசி ரோடு மற்றும் சத்தி ரோடு ஆகிய 2 வழித்தடங்களில் 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 32 ரெயில் ரெயிலயங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல் வழித்தடமான உக்கடம் பஸ் நிலையம் முதல் நீலாம்பூர் வரை 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
2-வது வழித்தடமாக கோவை ஜங்க்ஷன் முதல் வையம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரெயில் நிலையங்கள் இருக்கும். கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலையையொட்டி கோவையின் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் அந்த பஸ் நிலையம் வரை முதல் வழித்தடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
3 பெட்டிகள்
இந்த மெட்ரோ ரெயிலில் 3 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில் 200 பேர் முதல் 250 பேர் வரை பயணிக்க முடியும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மத்திய அரசின் அனுமதி பெற்று பன்னாட்டு நிறுவனங்களின் நிதிஉதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்திட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம் தொடங்கியதில் இருந்து 3½ ஆண்டுகளில் முழுவதும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அவினாசி ரோட்டில் 35 ஏக்கர் உள்பட மொத்தம் 75 ஏக்கர் வரை கையகப்படுத்தப்படும். இதில் அரசு நிலம் எவ்வளவு, தனியார் நிலம் எவ்வளவு என்று கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, விமான நிலைய இயக்குனர் செந்தில் வேலவன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவை ரெயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரெயில் வழித்தடம் குறித்து மெட்ரோ ரெயில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
உயர்மட்ட பாலத்தில் மெட்ரோ ரெயில்
அவினாசி ரோடு வழித்தடத்தில் சாலையின் இடது புறத்தில் காங்கிரீட் தூண்கள் நிறுவப்பட்டு அதன்மீது மெட்ரோ ரெயில் இயக்கப்படும். சத்தி சாலை வழித்தடத்தில் சாலையின் நடுவே காங்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இதற்காக கான்கிரீட் தூண்கள் 15 மீட்டர் உயரம் முதல் 20 மீட்டர் உயரம் வரை அமைக்கப்படுகிறது.
கோவையில் முழுக்க உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு அதன்மீது மெட்ரோ ரெயில் இயக்கப்படும். சென்னையில் உள்ளது போல் கோவையில் நிலத்திற்கு அடியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படாது. கோவை ரெயில் நிலையத்தில் 2 வழித்தட மெட்ரோ ரெயில்களும் சந்திக்கும் வகையில் ஜங்க்ஷன் அமைக்கப்படுகிறது.
ரெயில் நிலையங்கள் விபரம்
உக்கடம்-நீலாம்பூர் முதல் வழிடத்தில் உக்கடம் பஸ்நிலையம், டவுன்ஹால், கோவை ரெயில் நிலைய சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, லட்சுமி மில், நவ இந்தியா, பீளமேடு புதூர், பன்மால், ஹோப் காலேஜ், கோவை அரசு மருத்துவ கல்லூரி, சித்ரா, எம்.ஜி.ஆர். நகர், பி.எல்.எஸ்.நகர், வெங்கிட்டாபுரம், நீலாம்பூர், விமான நிலைய இணைப்பு.
கோவை சந்திப்பு முதல் வையம்பாளையம் 2-வது வழிடத்தடத்தில் கோவை சந்திப்பு, ராம்நகர், காந்திபுரம் பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், மூர்மார்க்கெட், கணபதி புதூர், அத்திப்பாளையம் சந்திப்பு, விநாயகபுரம், சித்ரா நகர், சரவணம்பட்டி, விசுவாசபுரம், வி.ஜி.பி. நகர், வையம்பாளையம்.