சென்னையில் 16 தொகுதிகளில் 39 லட்சம் வாக்காளர்கள்: வேளச்சேரியில் அதிகம், துறைமுகத்தில் குறைவு
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் வேளச்சேரியில் அதிக வாக்காளர்களும், துறைமுகத்தில் குறைந்த அளவில் வாக்காளர்களும் உள்ளனர்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், துணை கமிஷனருமான விஷூ மகாஜன், ரிப்பன் மாளிகையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2023-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. இந்த சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மக்கள் தொடர்பு அலுவலகத்திலும் பொதுமக்கள் சரிபார்த்து கொள்வதற்காக வைக்கப்படுகிறது.
பெயர் சேர்த்தல், திருத்தம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (2005-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி, 2023 செப்டம்பர் 30-ந் தேதி வரை 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதேபோல் பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டசபை தொகுதிக்கு உள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.
அதனுடன் அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 8-ந் தேதி முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பம்
அத்துடன் வருகிற 12, 13, 26 மற்றும் 27 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8-ஐ வழங்கலாம். அத்துடன் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டசபை தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
கடந்த ஜனவரி 5-ந் தேதி அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 20 லட்சத்து 4 ஆயிரத்து 860, பெண்கள் 20 லட்சத்து 74 ஆயிரத்து 616, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,102 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 80 ஆயிரத்து 578 ஆகும்.
நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19 லட்சத்து 15 ஆயிரத்து 611 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து 75 ஆயிரத்து 778 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,058 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் 1 லட்சத்து ஆயிரத்து 483 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 13 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்கள் மற்றும் 94 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 920 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் 12 ஆயிரத்து 234 ஆண்கள், 14 ஆயிரத்து 515 பெண்கள் மற்றும் 50 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 26 ஆயிரத்து 799 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
துறைமுகத்தில் குறைவு
குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 211 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 994 வாக்காளர்களும் உள்ளனர். ஜனநாயகத்தை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு சுருக்க திருத்தம் இருந்தால் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜிலானி பப்பா, தி.மு.க. சார்பில் இளைய அருணா, வக்கீல் சந்துரு, மருது கணேஷ், அ.தி.மு.க. சார்பில் பாலகங்கா, பா.ஜ.க. சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.