கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல் நாளில் 39,640 விண்ணப்பங்கள் பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல் நாளில் 39,640 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல் நாளில் 39,640 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
மகளிர் உரிமைத்தொகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகள் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நேற்று தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை இந்த பதிவு முகாம் நடைபெற உள்ளது.
முதல் கட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 991 நியாயவிலைக் கடைகளில் உள்ள 2 லட்சத்து 99 ஆயிரத்து 413 ரேஷன் அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. முகாம்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், தொடக்கப்பள்ளி வளாகம், இ- சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் காலை 9மணி முதல் மாலை 5 மணி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு முகாமினை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் அத்தியந்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஆணாய்பிறந்தான் ஊராட்சி கிராம சேவை மையத்திலும், கனந்தம்பூண்டி ஊராட்சி மற்றும் காவேரியான் பூண்டி ஊராட்சியில் உள்ள நூலகத்திலும், செங்கம் ஒன்றியம் சின்னகோளப்பாடி ஊராட்சி கிராம சேவை மையத்திலும், பாச்சல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையத்திலும் நடைபெற்ற முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்நாளான நேற்று 39 ஆயிரத்து 640 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் ராஜசேகரன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, தாசில்தார் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரித்விராஜ், அமிர்தராஜ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.