'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை


புரொபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 6 Jan 2023 8:25 AM IST (Updated: 6 Jan 2023 10:29 AM IST)
t-max-icont-min-icon

'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை,

'புரொபஷனல் கொரியர்' என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3 ஆயிரத்து 300 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும், பதிவு அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரி துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

அதனடிப்படையில், வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களாக காலை முதல் சென்னை மண்ணடி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் செயல்படும் புரொபஷனல் கூரியர் நிறுவன அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் நகை, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது

சோதனை முழுமையாக முடிந்த பின்பே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம், நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story