காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி


காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி
x

ஆனைகட்டி மலைப்பகுதியில் காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

கோயம்புத்தூர்


ஆனைகட்டி மலைப்பகுதியில் காயமடைந்த யானையை 3-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. டிரோன் கேமரா மூலம் தேடியும் யானையை வனத்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

காயமடைந்த யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி சீங்குழி பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே கொடுங்கையூர் ஆற்றுப்பள்ளத்தில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை காயமடைந்து உடல் சோர்வுடன் நின்றுகொண்டிருந்தது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். முதலில் எல்லை பிரச்சினை காரணமாக யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா, தமிழக வனத்துறையா என குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் 2 மாநில வனத்துறையினருமே இணைந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானையை தேடும் பணி தொடங்கியது. அதற்குள் யானை அங்கிருந்து நகர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து மண்டல வன பாதுகாப்பாளர்கள் ராமசுப்பிரமணியம், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் காயமடைந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது நாளாக தேடும் பணி

இதற்கிடையில் காயமடைந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம் முத்து வரவழைக்கப்பட்டு, அந்்த பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் காயமடைந்த யானை ஆனைகட்டியை அடுத்த செங்குட்டை பகுதியில் தென்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக வனத்துறையினர் காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். டிரோன் கேமராக்களை பறக்கவிட்டும் காட்டு யானையை தேடினர். ஆனால் காயமடைந்த காட்டு யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

தோலாம்பாளையம் பகுதியில் ஏற்கனவே 3 யானைகள் அங்கு சுற்றி வருகின்றன. அதனுடன் இந்த யானை சேர்ந்து விட்டதா அல்லது இன்னும் தனியாக தான் சுற்றுகிறதா என்று தெரியவில்லை. தொடாந்்து இன்று (வெள்ளிக்கிழமை) தேடுதல் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story