ஓட்டல்களில் 3-வது நாளாக சோதனை:57 கிலோ காலாவதியான இறைச்சி பறிமுதல்
நாமக்கல்லில் 3-வது நாளாக ஓட்டல்களில் நடந்த சோதனையில் 50 கிலோ காலாவதியான உணவு, இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஓட்டல்களில் சோதனை
நாமக்கல்லில் தனியார் துரித உணவு தயாரிக்கும் ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் உமா உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்கள், அவைச ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 108 ஓட்டல்களில் நடத்திய சோதனையில் 58 கிலோ காலாவதியான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்தும், 24 கடைகளுக்கு அபராதம் விதித்து, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3-வது நாளாக...
இதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்தினர். மொத்தமாக 87 ஓட்டல்களில் நடந்த இந்த சோதனையில் 57 கிலோ காலாவதியான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.