கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரி,
கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெற்று வருகிறது.
10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழாத் திருப்பலியை ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்ப்பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. கொரோனா அபாயம் நீங்கியதின் காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக தேர்ப்பவனி செல்லும் இடங்களில் தேர்ப்பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோட்டார் தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்ளுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதியை பணி நாளாக மாவாட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.