3-வது மனைவி தீ வைத்து எரிப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதில் குழந்தையும் படுகாயமடைந்தது.
பொள்ளாச்சி
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதில் குழந்தையும் படுகாயமடைந்தது.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீ வைத்து எரிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேரு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). தொழிலாளி. இவருக்கு கவுரி (32) என்ற மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கிருஷ்ணமூர்த்தி தகராறு செய்ததாக தெரிகிறது.
பின்னர் கவுரி, தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தூங்க சென்றார். இரவு 11 மணிக்கு தூங்கி கொண்டிருக்கும் போது பெயிண்ட் கலக்க பயன்படுத்தப்படும் டர்பென்டைன் ஆயிலை கவுரி மீது ஊற்றி கிருஷ்ணமூர்த்தி தீ வைத்தார். இதில் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த குழந்தை மீதும் தீ பரவியது. தீப்பிடித்து எரிந்ததால் கவுரியும், குழந்தையும் அலறி துடித்தனர்.
கைது
சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த கவுரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
நடத்தையில் சந்தேகம்
விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து, 2 மனைவிகளையும் விவகாரத்து செய்துவிட்டார். இதயைடுத்து கவுரியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 3-வதாக திருமணம் செய்து உள்ளார். கவுரிக்கும் இது 2-வது திருமணமாகும். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கிருஷ்ணமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சம்பத்தன்று கவுரி தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர் மீது டர்பென்டையன் ஆயிலை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
கைதான கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியில் நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை தொழிலாளி தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.