4 பேர் கைது
4 பேர் கைது
தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கா.ரவி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் ஜனார்த்தனன் (வயது20). இவர் சம்பவத்தன்று சின்னையாபிள்ளை தெருவில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பார்த்து, மெதுவாக செல்லும்படி கூறினர். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் சிலர் சமாதானப்படுத்தினர். இந்தநிலையில் ஜனார்த்தனன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சின்னையாபிள்ளை தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 4 பேர் அரிவாளால் ஜனார்த்தனனை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த ஜனார்த்தனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னையாபிள்ளை தெருவை சேர்ந்த ராமன், லட்சுமணன், ஸ்ரீராமர், கார்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.