கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலை நடத்திய கடலூரை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்


தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலை நடத்தியதாக கடலூரை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சாராய வேட்டை

கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வடலூர் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது, போலி மதுபாட்டில் விற்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறினார்.

அதன்பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார், கல்வராயன்மலையில் தீவிர சோதனை நடத்தினர். இதில் நடுதொரடிப்பட்டில் வெங்கடேசன் (வயது 35) என்பவரது குடோனில் போலி மதுபான ஆலை இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த ஆலையில் இருந்து போலி மதுபாட்டில்கள், பிரபல மதுபான தயாரிப்பு ஆலைகளின் போலி முத்திரை கொண்ட ஸ்டிக்கர்கள், மூடி சீல் வைக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

மேலும் இதுதொடர்பாக வெங்கடேசன், கடலூர் மாவட்டம் வானதிராயபுரம் அடுத்த தென்குத்து கிராமத்தை சேர்ந்த குபேந்திரன்(50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கல்வராயன்மலையை சேர்ந்த வெங்கடேசனும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குபேந்திரனும் சாராய வழக்கு சம்பந்தமாக கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த வீரன் என்ற பாலகிருஷ்ணன்(48), திருச்செந்தூர் தாலுகா துறையூர் கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ரியாஸ்அகமது(41) ஆகியோர் மூலம் பிரபல கம்பெனி பெயரில் போலியான முத்திரையிடப்பட்ட ஸ்டிக்கர், சீல், பாட்டில் மூடி, எசன்ஸ் போன்ற பொருட்களை வாங்கி வந்து, மதுபானம் தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதில் குபேந்திரன் கள்ளச்சாராயம் தயாரித்து சீல் வைத்து கொடுக்க ஒவ்வொரு பாட்டிலுக்கும் வெங்கடேசனிடம் தலா ரூ.20 பெற்றதாக கூறப்படுகிறது.

பரபரப்பு

மேலும் ஆலையில் தயாரிக்கும் மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசன், குபேந்திரன் கொடுத்த தகவலின் பேரில் பாலகிருஷ்ணன், ரியாஸ்அகமது ஆகியோரை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைதான வெங்கடேசன், குபேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று ஆலை இயங்கிய இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மது தயாரிப்பது குறித்து போலீசார் முன்னிலையில் அவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story