அந்தியூர், டி.என்.பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது


அந்தியூர், டி.என்.பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

ஈரோடு

அந்தியூர், டி.என்.பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

3 பேர் கைது

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை சோதனை சாவடியில் பர்கூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சரக்கு வேனில் ஏறி சோதனை செய்து பார்த்தபோது, 42 சாக்குமூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது உள்ளே ரேஷன் அாிசி இருந்தன. இதனால் சரக்கு வேனின் டிரைவர் நசியனூர் பழனிசாமி (வயது 38), மற்றும் வேனில் வந்த குறிச்சியை சேர்ந்த சுரேஷ் (36), பவானியை சேர்ந்த முத்துசாமி (45) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் பர்கூர் மலை கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை வாங்கி ஈரோட்டுக்கு விற்பனை செய்ய வேனில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, சரக்கு வேனையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்கள்.

2 டன் ரேஷன் அரிசி

பங்களாப்புதூர் போலீசார் அங்குள்ள சத்தியமங்கலம்- கோபி சாலையில் மூன்று ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த சரக்கு வேனில் 50 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டனர்.

இதைத்தொடர்ந்து சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் திருப்பூர் மாவட்டம் ரங்கநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சரண் (வயது 21) என்பதும், அவர் டி.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை பவானிக்கு கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதையடுத்து சரணை போலீசார் கைது செய்ததுடன், ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்து ஈரோடு மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story