பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது


பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
x

பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே பெருந்தொழுவு அமராவதிபாளையம் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு நேற்று முன்தினம் இரவு 4 பேர் வந்தனர். அவர்கள் அங்கு பானிபூரி வாங்கி சாப்பிட்டனர்.

அப்போது பானிபூரியில் உப்பு இல்லை என பேக்கரி கடையில் இருந்தவர்களிடம் அவர்கள் கூறினர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கடையில் இருந்து வெளியே வந்த அந்த 4 பேரும் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடையினுள் வீசினார்கள்.

இதில் பாட்டில் உடைந்து அதில் இருந்த பெட்ரோல் சிதறியது. ஆனால் நல்லவேளையாக அங்கிருந்த யார் மீதும் பெட்ரோல் குண்டு படவல்லை. கடையில் இருந்த பொருட்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. பின்னர் அங்கிருந்து அவர்கள் 4 பேரும் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

4 பேர் கைது

இதுகுறித்து கடையின் ஊழியரான கொடுவாய் வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் திருப்பூர் செரங்காடு அஸ்வின் (21), பூவிலங்கு (25), சக்தி கணேஷ் (23), தினேஷ்குமார் (23) ஆகிய 4 பேர் பேக்கரியில் தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story