தொழில் அதிபரை காரில் கடத்திய வழக்கில் 4 பேர் கைது
கோவையில் போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரை காரில் கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரை காரில் கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
தொழில் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர், கடந்த 8-ந் தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்று ஓட்டலில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று அவர் ஓட்டல் அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்
பின்னர் அவர்கள், சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை பொது மக்களை ஏமாற்றி விற்பதாக புகார் வந்துள்ளது. எனவே விசா ரிக்க வேண்டும் எனக் கூறி சஞ்சீவியை மிரட்டி, அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை கோவைக்கு கடத்தி வந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த சிபின் என்பவர் தன்னை கேரள போலீஸ் என்று கூறி வந்து உள்ளார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்தனர். அவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறினார்.
30 பவுன் நகை பறிப்பு
பின்னர் அந்த கும்பல் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்தனர். மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க சங்கிலி, 10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர்.
அதன்பிறகு அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோடு டோல்கேட் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறி தப்பி சென்றனர்.
இது குறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் சஞ்சீவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 பேர் கைது
அதன் பேரில் விசாரணை நடத்தி கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத் தை சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 15½ பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சமீர் முகமது தனது பெயரை அலெக்ஸ் என்று கூறி ஏமாற்றியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.