விவசாயி கொலையில் 4 பேர் கைது
நெல்லை அருகே சுத்தமல்லியில் நடந்த விவசாயி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியில் நடந்த விவசாயி கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி கொலை
நெல்லை அருகே சுத்தமல்லி வ.உ.சி.நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). விவசாயியான இவர் ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற கொம்பையா அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொம்பையாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருத்தபாண்டி என்ற கண்ணன் (45), சுத்தமல்லியை சேர்ந்த ராமசாமி மகன் இசக்கிப்பாண்டி (41), பேட்டை சத்யா நகரை சேர்ந்த கணபதி மகன் மாரி பாண்டி (26), பேட்டையை சேர்ந்த மைக்கேல் மகன் ஜான் டேனியல் (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கருத்த பாண்டி மீது ஆடு திருடுதல், அடி-தடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் குண்டா் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். கருத்த பாண்டி குறித்து ஆடு திருடுவது சம்பந்தமாக கொம்பையா போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருத்த பாண்டி, கொம்பையாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கொம்பையா தினமும் சுத்தமல்லி வயல்காட்டில் ஆடுகளை மேய்க்க செல்வதை தெரிந்து கொண்டு கருத்த பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து கொம்பையாவை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.