'நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் 4 கோடி வழக்குகள்' ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தகவல்


நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் 4 கோடி வழக்குகள் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தகவல்
x

நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கின்றன என்று ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில், சட்ட கருத்தரங்கம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணவேணி, முன்னாள் அரசு தலைமை வக்கீல் ஜோதி ஆகியோர் வக்கீல்களின் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.

4 கோடி வழக்குகள் தேக்கம்

கருத்தரங்கில் பங்கேற்ற முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டத்துறை தற்போது நலிவடைந்து வருகிறது. இதற்கு போலி வக்கீல்களே காரணம். நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகள் விரைவாக முடித்து வைக்கப்பட வேண்டும் என்றால், முறையாக படித்து அனுபவம் பெற்ற வக்கீல்களாக இருக்க வேண்டும். போலி வக்கீல்களால் முடியாது. எனவே முறையாக சட்டம் படித்தவர்கள் மட்டுமே வக்கீல் தொழிலை பாதுகாக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகள் சிலவற்றில் வகுப்பறை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதேபோல் பேராசிரியர்களும் இல்லை. அங்கு மாணவர்கள் சேர்க்கையும் குறைவாகவே உள்ளது. ஆனால் ஆண்டுக்கு 300 முதல் 500 பேர் வரை சட்டப்படிப்பில் வெற்றி பெற்றவர்கள் என கூறிக்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பார் கவுன்சில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாக்கும் ஆயுதம்

தற்போதெல்லாம், குற்றவாளிகள் வக்கீல்களாக மாறி தங்களை பாதுகாக்கும் ஆயுதமாக இந்த தொழிலை பயன்படுத்துகின்றனர். 140 நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால் வழக்குகள் பெருமளவு தேக்கமடையும்.

நீதிபதிகள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் குழு பரிந்துரை செய்தும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் கேட்டால் அவர் சட்ட விதிகளுக்கு முரணாக பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story