மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.4¾ கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.4¾ கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 310 பேருக்கு ரூ.4¾ மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 310 பேருக்கு ரூ.4¾ மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காப்பீட்டு திட்டம்

ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் குடும்பங்கள் உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணமில்லாமல் பெறவேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் சிகிச்சைக்கான முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த இந்த திட்டத்தின் கீழ் 1 ஆயிரத்து 513 சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், 810 அரசு ஆஸ்பத்திரிகள், 950 தனியார் ஆஸ்பத்திரிகள் என 1760 ஆஸ்பத்திரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

6 அரசு ஆஸ்பத்திரிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையாறு, குத்தாலம் ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும், கொள்ளிடம் மற்றும் மயிலாடுதுறையில் 4 தனியார் ஆஸ்பத்திரியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கூர், திருவெண்காடு, குத்தாலம், கொள்ளிடம், மணல்மேடு ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்பந்தப்பட்ட, இருதய நோய் சிகிச்சைகள் உள்ளிட்ட நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.4 கோடி 70 லட்சம் மதிப்பில்...

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 7.5.2021 முதல் தற்போது வரை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக டயாலிசிஸ் மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, கண்நோய் அறுவை சிகிச்சை, பொது சிகிச்சை என மொத்தம் 6 ஆயிரத்து 310 பேருக்கும் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story