ரூ.4¼ கோடியில் உருவச்சிலைகளுடன் கூடிய அரங்கம்


ரூ.4¼ கோடியில் உருவச்சிலைகளுடன் கூடிய அரங்கம்
x
தினத்தந்தி 14 May 2023 3:45 AM IST (Updated: 14 May 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களுக்கு ரூ.4¼ கோடியில் உருவச்சிலைகளுடன் கூடிய அரங்கம் கட்டுமான பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பி.ஏ.பி. திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களுக்கு ரூ.4¼ கோடியில் உருவச்சிலைகளுடன் கூடிய அரங்கம் கட்டுமான பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பி.ஏ.பி. திட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பி.ஏ.பி. (பரம்பிக்குளம்-ஆழியாறு) திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழக-கேரள அரசுகளின் ஒப்பந்தத்துடன் இந்த திட்டத்தின் கீழ் அணைகள் கட்டப்பட்டு, மலையை குடைந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையில் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியம், நா.மகாலிங்கம் ஆகியோருக்கு உருவச்சிலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மாநாட்டு பயிற்சி மண்டபம் பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடியே 28 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று கட்டுமான பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் பிரியங்கா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, முன்னாள் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் பலர் உடன் இருந்தனர். ஆய்விற்கு பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பி.ஏ.பி. திட்டம் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர், முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகியோருக்கு உருவச்சிலைகள் அமைக்கப்படுகிறது. வி.கே.பழனிசாமி கவுண்டர் பெயரில் கீழ் தளமும், மேல் தளத்திற்கு நா.மகாலிங்கம் பெயரும் வைக்கப்படுகிறது.

அடித்தளமாக அமையும்

மேலும் விவசாயிகள் கருத்தரங்கம், அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரங்கம் அமைக்கப்படுகிது. மேல்தளத்தில் பி.ஏ.பி. திட்டம் குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்த திட்டங்கள் குறித்த வடிவமைப்பு உருவாக்கப்படும். பணிகளை 8 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு. இருந்தாலும், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி என்பது பா.ஜனதா கட்சிக்கு ஒரு எதிர்ப்பு உருவாகி விட்டது என்பதற்கான அடையாளமாகும். அதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. இதுவே ஒரு அடித்தளமாக அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story