புற்றுநோயை தெரிந்து கொள்ள ரூ.4½ கோடியில் கருவி


புற்றுநோயை தெரிந்து கொள்ள ரூ.4½ கோடியில் கருவி
x
தினத்தந்தி 2 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 6:47 PM GMT)

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை தெரிந்து கொள்ள ரூ.4 ½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள கருவியை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்

விழுப்புரம்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1½ கோடி மதிப்பில் புதிதாக கதிரியக்க புற்று நோயியல் துறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அங்கு ரூ.4½ கோடி மதிப்பில் டெலிகோபால்ட் என்ற கதிரியக்க கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் இந்த கருவியை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து டெலிகோபால்ட் கதிரியக்க கருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி தொடங்கி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது மருத்துவக்கல்லூரியில் புற்றுநோயை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் டெலிகோபால்ட் கதிரியக்க கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தற்போது பொதுமக்கள் மக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இப்பகுதிபுற்றுநோயாளிகள் மேம்படுத்தப்பட்ட சிகிச்சையை பெற சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

தரமான சிகிச்சை பெறலாம்

தற்போது இந்த மருத்துவக்கல்லூரியில் கதிரியக்க கருவி அமைக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 1200 பேர் இங்கு தரமான சிகிச்சையை பெறலாம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன், ரவிக்குமார் எம்.பி., கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் ஷீலாதேவி சேரன், ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், துணை தலைவர் பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், செல்வம், செந்தில்குமார், கண்காணிப்பு குழு எத்திராசன் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துறை உதவி பேராசிரியர் ராஜீவ்குமார் நன்றி கூறினார்.


Next Story