திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் திருமண மண்டபம்


திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் திருமண மண்டபம்
x

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். திருமண தோஷ நிவர்த்தி பெற்ற பலர் இங்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர். திருமணம் செய்ய இந்த கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததால் தமிழக அரசு சார்பில் அங்கு திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இந்த கோவில் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிட வசதியுடன் கூடிய பிரமாண்டமான திருமண மண்டபம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கியது. இதையடுத்து புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதற்கு கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, திருவிடந்தை ஊராட்சி மன்ற தலைவர் அமுதாகுமார், திருப்போரூர் தாசில்தார் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அடிக்கல் நாட்டினார். இதில் அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தபாரதிதாசன், கோவில் மேலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story