ரூ.4 கோடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.4 கோடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள்
x

கொள்ளிடம் பகுதியில் ரூ.4 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தாண்டவன்குளம், புதுப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தாண்டவன்குளம் ஊராட்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2021-22-ம் ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் தாண்டவன்குளம் கொட்டாயமேடு சாலையில் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சாலை அமைக்கும் பணி

இதேபோல, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் தாண்டவன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், புதுத்தெரு வண்டிப்பாலம், புதுமண்ணியாறு அருகிலும், சுந்தரம்பிள்ளைதெரு ஆகிய பகுதிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் படித்துறை கட்டும் பணியினையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் செலவில் தாண்டவன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் செலவில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணியையும் ஆய்வு செய்தார்.

மேலும், புதுப்பட்டினம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் செலவில் காளியம்மன் கோவில் அருகில் சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்ட அவர் அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ணசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, வாசுதேவன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story