தேவூர் அருகே சரபங்கா நதியில் மீண்டும் வெள்ளம்: 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின போக்குவரத்து பாதிப்பு


தேவூர் அருகே சரபங்கா நதியில் மீண்டும் வெள்ளம்:  4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின   போக்குவரத்து பாதிப்பு
x

தேவூர் அருகே சரபங்கா நதியில் இந்த ஆண்டு 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம்

தேவூர்,

சரபங்கா நதியில் வெள்ளம்

ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி வழியாக செல்லும் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் தேவூர் அருகே அரசிராமணி குஞ்சாம்பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அங்குள்ள விவசாய நிலத்தை மூழ்கடித்தபடி குள்ளம்பட்டி பகுதியில் இருந்து வெள்ளூற்று பெருமாள் கோவில் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

4 தரைப்பாலங்கள் மூழ்கின

இதன்காரணமாக ஆத்துகாடு பகுதியில் உள்ள சரபங்கா நதி தரைப்பாலம், அம்மன் கோவில் பாலம், செட்டிபட்டி ஓங்காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள தரைப்பாலம், தைலாங்காடு தரைப்பாலம் ஆகிய 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த 4 தரைப்பாலங்கள் வழியாக கடந்து செல்லும் மலை மாரியம்மன் கோவில், மாலங்காடு, கிழக்கு ஓலப்பாளையம், மேற்கு ஓலப்பாளையம், வெள்ளூற்று பெருமாள் கோவில், ஆரையான்காடு, செரக்காடு, சுக்கலான்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, கந்தாயி காடு, மீனுவாயன்காடு, தைலாங்காடு, உள்ளிட்ட கிராமப்புற பகுதி மக்கள் போக்குவரத்து தடையால் சிரமப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

மேலும் சரபங்கா நதி கரையோர பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல், கரும்பு, பருத்தி, மஞ்சள், வாழை, தென்னை நடப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

இதேபோல் அரசிராமணி செட்டிபட்டி சுடலை காளியம்மன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை தண்ணீர் சூழ்ந்து சென்றதால் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

வருவாய்த்துறையினர் நடவடிக்கை

இந்த மழை சேதம் குறித்து தகவல் கிைடத்ததும், சங்ககிரி தாசில்தார் பானுமதி தலைமையில், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் மற்றும் வருவாய் துறையினர் தண்ணீரில் முழ்கிய தரைப்பாலங்கள் வழியாக செல்ல தடை விதித்து பல்வேறு இடங்களில் தடுப்பு பேனர் வைத்து வெள்ள சேத சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அடிக்கடி சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் முழ்கும் தரைப்பாலங்களில் தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டன. இருப்பினும் பெரும் வெள்ளப்பெருக்கால் அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அவதிப்பட்டு வரும் கிராம பொதுமக்கள், இந்த பகுதிகளில் தரைப்பாலததிற்கு பதிலாக மேம்பாலம் அமைத்து நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story