கும்பகோணம் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன 4 சிலைகள் கண்டுபிடிப்பு


கும்பகோணம் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன 4 சிலைகள் கண்டுபிடிப்பு
x

கும்பகோணம் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன 4 சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செயல் அலுவலராக உள்ள ராஜா என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி.யில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலையை 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டதாகவும், சிலை இருந்த இடத்தில் போலி சிலை ஒன்றை வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

போலி சிலை வைப்பு

இந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்த டி.எஸ்.பி. டி.பி.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், 60 முதல் 65 ஆண்டுகளுக்கு முன்பு சில மர்ம நபர்கள் திருமங்கை ஆழ்வார் சிலையை திருடிவிட்டு, பக்தர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க போலி சிலையை வைத்துவிட்டு சென்றுவிட்டது தெரியவந்தது.

இந்த கோவிலில் திருடுபோன உண்மையான சிலையின் உருவப்படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் பெறப்பட்டு, போலி சிலையுடன் ஒப்பிடப்பட்டது. அப்போது, கோவிலில் உள்ள சிலை போலியானதுதான் என்பது உறுதியானது.

போலீஸ் விசாரணை

அதனைத் தொடர்ந்து, திருடுபோன திருமங்கை ஆழ்வார் சிலை ஏதாவது நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறதா? என்பது குறித்து ஆராயப்பட்டது. அப்போது, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியத்தில் திருட்டுபோன சிலை இருப்பது தெரியவந்தது.

அந்த சிலையை 1967-ம் ஆண்டு ஜே.ஆர்.பெல்மாண்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடம் இருந்து 850 டாலர் பணம் கொடுத்து, அந்த அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே, திருமங்கை ஆழ்வார் சிலை திருடுபோனதற்கான ஆதாரத்தை காண்பித்து, அந்த சிலையை மீட்டுக் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சி தகவல்

அதே நேரத்தில், குறிப்பிட்ட கோவிலில் திருட்டுபோனது ஒரு சிலை மட்டும் தானா?, அல்லது வேறு சிலைகளும் அப்போது திருடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆராய்ந்தனர். அதில், அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

அதாவது, சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டபோது, காளிங்கனர்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய 3 சிலைகளும் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

எனவே, அந்த சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடியபோது, அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் காளிங்கனர்த்தன கிருஷ்ணன் சிலையும், டெக்சாசில் உள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடாவில் உள்ள ஹில்ஸ் ஏல தொகுப்பு மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பது தெரியவந்தது. எனவே, அந்த சிலைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story