மதுரையில் கனமழைக்கு 4 பேர் பலி


மதுரையில் நேற்று மாலையில் தொடங்கி கனமழை கொட்டியது. 4 பேர் பலியானார்கள். போக்குவரத்து நெரிசலால் நகரமே ஸ்தம்பித்து போனது.

மதுரை

மதுரையில் நேற்று மாலையில் தொடங்கி கனமழை கொட்டியது. 4 பேர் பலியானார்கள். போக்குவரத்து நெரிசலால் நகரமே ஸ்தம்பித்து போனது.

மதுரையில் கனமழை

மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று பகலில் வெயில் இருந்தது. மாலையில் வானம் மேகமூட்டமாக மாறி, வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி தந்தது. பி்ன்னர் 6.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழையாக கொட்டியது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மதுரை மாநகரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர்

அலுவலகங்களில் இருந்து வீட்டிற்கு சென்றவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறினர். மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. ஆங்காங்கே வாகனங்கள் பழுதடைந்தன.

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

மதுரை ஆண்டாள்புரம் மேற்கு தெரு பகுதியில் கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு எச்.எம்.எஸ். காலனியை சோ்ந்த முருகன்(வயது 52), ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சோ்ந்த ஜெகதீசன்(38) ஆகியோா் தச்சுப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். இவர்கள் இருவரும் உறவினர்கள்.

கட்டிடத்தில் மின்மோட்டாா் அறை அருகே இவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மழைபெய்த போது, எதிா்பாராதவிதமாக அவா்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுபற்றி தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி பலி

மேலும் மதுரை ரெயில்வே நிலையம் எதிரே உள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் எதிர்ப்புறம் மழைக்காக மரத்தடியில் வயதான தம்பதியினர் ஒதுங்கி இருந்தனர். திடீரென்று அவர்கள் 2 பேரும் மழை நீரில் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே திடீர்நகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தது யார் என்று விசாரித்த போது, தெற்குவாசல் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அவருடைய மனைவி என்பது உறுதியானது. அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தார்களா அல்லது மழைநீரில் தவறி விழுந்து இறந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story