வேலைவாங்கி தருவதாக ரூ.4¾ லட்சம் மோசடி
குமரியில் வேலைவாங்கி தருவதாக ரூ.4¾ லட்சம் மோசடி. 7 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்,
குழித்துறை அருேக உள்ள மருதங்கோடு ஈச்சன்விளையை சேர்ந்தவர் பெனோ (வயது29). இவர் குழித்துறை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பாகோட்டை சேர்ந்த பென்னட் உள்பட 5 பேர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் எனக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினர். ஆனால் அவர்கள் கூறியது போல் வேலை வாங்கி தரவில்லை. இதனால் நான் பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது ரூ.92 ஆயிரம் மட்டும் தந்தார்கள். இன்னும் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் பணம் தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் பென்னட் உள்பட 5 பேர் மீது மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் அருமனை குஞ்சாலுவிளையை சேர்ந்த ரென்சோ (30) என்பவருக்கு வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி திருவரம்பை சோ்ந்த சேம்ராஜ் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி ஆகியோர் ரூ.3 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் வேலை வாங்கி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரென்சோ நாகர்கோவில் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சேம்ராஜ், ஷாலினி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.