திறக்கப்பட்ட 4 மாதத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த வகுப்பறை


திறக்கப்பட்ட 4 மாதத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த வகுப்பறை
x

நாட்டறம்பள்ளி அருகே 4 மாதங்களுக்கு முன்பு புதிதாக திறக்கப்பட்ட பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.

திருப்பத்தூர்

புதிய கட்டிடம்

நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கள்ளியூர், ஊசி கல்மேடு, பொம்பி வட்டம், நாகன் வட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 38 மாணவ- மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் சீரமைக்கப்பட்ட விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்டன.

பெயர்ந்து விழுந்தது

இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூறையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து கிடந்தது.

மேலும் பள்ளி வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இறைவணக்கம் நடந்து கொண்டிருந்த போது திடீரென மீண்டும் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு ஒப்பந்ததாரரை கண்டித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளி மேற்கூரை சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.


Next Story