போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தவர் உள்பட மேலும் 4 பேர் கைது
கனியாமூர் கலவர வழக்கு: போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தவர் உள்பட மேலும் 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைத்திருந்த பள்ளி வாகனங்கள், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் குறித்து டி.ஐ.ஜி.பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்களை கைது செய்து வருகிறார்கள்.
மேலும் கலவரம் சம்பந்தபமான வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு தொடர்புடைய நபர்களை போலீசர் கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கலவரத்தின்போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பாக சின்னசேலம் தாலுகா செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோமதுரை மகன் மணிவர்மா(வயது 21), போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய உளுந்தூர்பேட்டை தாலுகா பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன்(20), பள்ளியை சேதப்படுத்திய ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் சந்தோஷ்(22), சங்கராபுரம் தாலுகா சு.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் நவீன்குமார்(21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.