படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
திருப்பூர்


பல்லடம் அருகே படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். உடல்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

4 பேர் படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). பா.ஜ.க. கிளை தலைவராக இருந்தார்.

கடந்த 3-ந்தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கும்பல் மோகன்ராஜ், அவரது அண்ணன் செந்தில்குமார் (47), அவரது தாயார் புஷ்பவதி (69), மோகன்ராஜின் சித்தி ரத்தினம்மாள் (58) ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரில் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து (24) மட்டும் போலீசாரிடம் சிக்கினான். மேலும் நெல்லை மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம் வெங்கடேஷ் (27), தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனைமுத்தையா (22) ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம்

கொலையான செந்தில்குமாரிடம் வெங்கடேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரை செந்தில்குமார் வேலையை விட்டு நீக்கினார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வெங்கடேஷ், செந்தில்குமாரின் வீட்டுக்கு செல்லும் பாதையில் தனது நண்பர்கள் செல்லமுத்து, சோனைமுத்தையா ஆகியோருடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்றும் அந்த இடத்தில் மது அருந்தியதை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரையும் வெங்கடேஷ் தனது நண்பர்கள் செல்லமுத்து, சோனைமுத்தையா ஆகியோருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் கொலையாளிகளான மற்ற 2 பேரையும் கைது செய்தால் மட்டுமே கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பெற்றுக்கொள்வோம் என்று அவரது உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 2-வது நாளாக பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மேலும் 4 பேர் கொலையை கண்டித்து நேற்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா உள்ளிட்டோர் கள்ளக்கிணறில் உள்ள செந்தில்குமாரின் வீட்டில் வைத்து அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம், விரைவில் 2 பேரையும் பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து உடல்களை வாங்குவதாக உறவினர்கள் அறிவித்தனர். பின்னர் நேற்று மாலை 3:30 மணியளவில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து உடல்கள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பெண்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உடல்கள் கொண்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ஊர்வலமாக...

ஊர்வலத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன் மற்றும் பா.ஜ.க.வினர், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் கள்ளக்கிணறு கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கள்ளக்கிணறில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பல்லடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story