புதிதாக 4 தொழிற்பிரிவுகள் தொடக்கம்
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக 4 தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் சேர்க்கை வரும் 20-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக 4 தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் சேர்க்கை வரும் 20-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.
புதிதாக 4 தொழிற்பிரிவுகள்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக 4 தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அட்வான்ஸ் சி.என்.சி மெஷினிங் டெக்னீசியன், 2 பேசிக் டிசைனர் அன்டு விர்ச்சுவல் வெரிபையர் (மெக்கானிக்கல்) ஆகிய 2 வருட தொழிற் பிரிவுகளுக்கும், மேனுபேக்சரிங் புராசஸ் கண்ட்ரோல் அன்டு ஆட்டோமேஷன், இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் ஆகிய ஓராண்டு தொழிற் பிரிவுகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், எந்திர மனிதனால் வெல்டிங் செய்யப்படும் நவீன தொழில்நுட்ப பயிற்சி, ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்துடன் கூடிய எந்திரங்களில் பயிற்சி, அனைவருக்கும் கம்ப்யூட்டர் மூலம் நவீன பயிற்சியும், பயிற்சி முடிந்ததும் உடனடியாக வேலைவாய்ப்பும் பெற முடியும். மேலும் பிட்டர், டர்னர், மெஷினிட், வயர்மேன் போன்ற 2 ஆண்டு தொழிற்பிரிவுகளும், வெல்டர், கோபா போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளும் உள்ளன.
வேலைவாய்ப்பு
எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் உயர்கல்வி படித்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணையதளத்தின் மூலமாகவோ அல்லது காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20-ந்தேதி வரை நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், விலையில்லா சீருடைகள், காலணி, வரைப்படக்கருவி, நோட்டுப்புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவி தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1750 உதவி தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.