லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னதாராபுரம் அருகே உள்ள காசிப்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பதாக கரூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜ், சின்னதாராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது 57), மருதாஜலமூர்த்தி (வயது 46) ஆகியோர் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் குளித்தலை சுங்ககேட், சத்தியமங்கலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றதாக மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியையும் (63), குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி (42) என்பவரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.