தேக்கு மரங்களை திருடிய 4 பேர் கைது
தேக்கு மரங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (வயது 62). இவர் தனது வயலுக்கு இரவு நேரம் காவலுக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் தனது வயலுக்கு சென்றபோது சந்தேகப்படுகின்ற வகையில் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலை மட்டங்கால் பெரியகுளம், சின்ன குழுமி அருகில் ஒரு சரக்கு வேன் மற்றும் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளும் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பிள்ளை தனது உறவினர்களை அழைத்து கொண்டு மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்த 4 தேக்கு மரம் மற்றும் ஒரு வேப்பமரத்தை தஞ்சை மாவட்டம் சா.வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (32), பட்டுக்கோட்டை சமுத்திரம், ராஜகோபால் மகன் ராஜன் (23), மகாராஜபுரம் இளவரசன் (32), உடையார் தெரு செந்தில்குமார் (38) ஆகிய 4 பேர் சேர்ந்து மரங்களை திருடி கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் செல்லப்பிள்ளை தனது உறவினர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து கட்டி வைத்தார். பின்னர் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.