பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் ஜோதிநகரை சேர்ந்தவர் அழகர் மகன் சரவணன் (வயது50). இவர் ராமநாதபுரம் காட்டூரணியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பொங்கல் அன்று பிற்பகல் வரை ஓட்டல் நடத்திவிட்டு பின்னர் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளமனூர் கிழக்கு கடற்கரை சாலை அருகில் சென்றபோது அங்கு நின்றிருந்த 4 பேர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுக்கவே ஆத்திரமடைந்த 4 பேரும் கத்தியால் குத்த வந்தபோது அவர் தடுத்துள்ளார். தனது சூழ்நிலையை உணர்ந்த சரவணன் கத்தி கூச்சலிடவே அந்த வழியாக சிலர் வருவதை கண்ட 4 பேரும் அவரை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவர் மட்டும் தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவரை அழைத்து செல்ல மற்றவர்கள் முயன்றபோது அந்த வழியாக வந்தவர்களும், சரவணனும் 4 பேரை பிடித்து மோட்டார் சைக்கிளுடன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் பாரதிநகர் காலாங்கரையை சேர்ந்த அப்துல்ரகுமான் (22), கடம்பாநகர் சக்தி (22), பழைய சோதனை சாவடி ஆதம்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (23), பட்டணம்காத்தான் பழைய சோதனை சாவடி வடக்கு பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (20) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.