ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் கைது
நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மகும்பல் கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலச்செவலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக விஜயகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இதற்கிைடயே விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.