டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது
நெமிலியில் நடைபெற்ற டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிணமாக கிடந்தார்
நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் என்கிற பிரபு (வயது 40). காஞ்சீபுரத்தில் டிஜிட்டல் பேனர் கடை நடத்திவந்தார். நேற்று முன்தினம் மீன் பிடிக்க ஏரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாலை 4 மணியளவில் கீழ்வீதி ஏரிக்கு செல்லும் வழியில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சென்று உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
4 பேர் சிக்கினர்
அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல், டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி, நெமிலி சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, லோகேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நெமிலி போலீசார் புன்னை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நெமிலியை அடுத்த கீழ்வீதியை சேர்ந்த மண்டியப்பன் மகன் ராமதாஸ் (32), ராம்மோகன் என்பவரின் மகன் தீபக் என்கிற தாயுமானவன் (27), செல்வம் மகன் தங்கராஜ் (27), கணேசன் மகன் தங்கராஜ் (23) என்பதும், இவர்கள்தான் லாரன்சை கொலை செய்தனர் என்பதும் தெரியவந்தது.
கத்தியை வீசியதால் தாக்கினோம்
அவர்கள் கூறுகையில் எங்கள் ஊர் ஏரியில் மீன் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை அறியாமல் லாரன்ஸ் என்பவர் மீன் பிடித்துகொண்டிருந்தார். இங்கே மீன் பிடிக்கக் கூடாது என்று நாங்கள் கூறியபோது அவர் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அவர் கையில் வைத்திருந்த கத்தியை எங்கள் மீது வீசினார். நாங்கள் பதிலுக்கு கற்களை எடுத்து வீசியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டோம் என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.