செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியரான வினோத் (வயது 28) கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதாகி ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் உள்ள பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த பூவாயி என்ற பூவரசன்(21), வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(21), முத்து நகரை சேர்ந்த பப்லு என்ற சத்தியமூர்த்தி(24), வடக்கு மாதவி ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ்(21) ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மேற்கண்ட பூவரசன், மணிகண்டன், சத்தியமூர்த்தி, வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலினை பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று வழங்கினர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு மணி வெகுவாக பாராட்டினார்.