பசுமாட்டை திருடிய 4 பேருக்கு அபராதம்
கடையம் அருகே பசுமாட்டை திருடிய 4 பேருக்கு அம்பை கோர்ட்டு அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
அம்பை:
கடையம் அருகே உள்ள மேல கோவிலூத்து அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விவசாயி மூக்கையா. இவரது வீட்டின் அருகே மரத்தில் கட்டி இருந்த சிந்து பசுமாட்டை கடந்த 2015-ம் ஆண்டு மர்ம நபர்கள் திருடியதாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையம் அருகே உள்ள கரிசலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன், வடக்கு மடத்தூரைச் சேர்ந்த ராமர், சடையப்பபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மற்றும் பாண்டி ஆகியோர் பசுமாட்டை திருடியது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பல்கலை செல்வன் விசாரித்து பசுமாட்டை திருடிய குற்றத்திற்காக ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த 5 நாட்களை சிறை தண்டனையாக கருதி 4 பேருக்கும் தலா ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.