சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x

பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது.

திருச்சி

பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது.

சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோவத்தக்குடியை சேர்ந்தவர் அன்னபூரணி(வயது 75). இவரது 1½ பவுன் தங்க சங்கிலி திருட்டுபோனது. இதுகுறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சமயபுரத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த காளியம்மாள்(43), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரேகா என்கிற கல்பனா(43) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார்(26), திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சரவணன்(44) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவது தெரிய வந்தது. மேலும், அவர்கள் திருடிய நகைகளை விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களிடம் கொடுத்து பல்வேறு இடங்களில் ரூ.3 கோடிக்கும் மேல் இடங்கள் வாங்கி பத்திரப்பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும், காளியம்மாள் தனது மகளுக்கு சமயபுரத்தில் உள்ள மண்டபத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் நடத்தி இருப்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 58 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி கொலுசுகள், ரூ.26 ஆயிரம் பணம் மற்றும் சங்கில பறிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய கட்டர் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story