சிறுவன் உள்பட 4 பேர் கைது


சிறுவன் உள்பட 4 பேர் கைது
x

ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி பணம் கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி பணம் கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தந்தை, மகனுக்கு கத்திக்குத்து

திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவரது மகன் யுவராஜ் (25). இவர்கள் ஊட்டியில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு பணம் வசூலித்து கொடுக்கும் ஏஜெண்டுகளாக உள்ளனர். காய்கறி பட்டுவாடா தொகை ரூ.32 லட்சத்தை வாங்கிக் கொண்டு, திருச்சியில் இருந்து பஸ் ஏறி ஊட்டிக்கு கடந்த 4-ந் தேதி வந்தனர்.

அப்போது ஏ.டி.சி. பகுதியில் தந்தை, மகனை சுற்றி வளைத்த கும்பல் கத்தியால் குத்தி ரூ.9 ஆயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பியது. இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30), காங்கேயத்தை சேர்ந்த 16வயது சிறுவன் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ரூ.32 லட்சம் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

4 பேர் கைது

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் கொடுத்த தகவலின் பேரில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த மாதவன் (20), நிதிஷ் குமார் (20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். ரூ.32 லட்சத்தை கொள்ளை அடிக்க திருச்சியில் இருந்து பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது.

இதில் 4 பேருக்கும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதியானது. சிறுவன், சுபாஷ் சந்திரபோஸ், மாதவன், நிதிஷ் குமார் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 3 பேர் ஊட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுவன் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story