வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் இறந்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 31). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று துரைமுருகன் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நொச்சியம் அருகே திருச்சி - துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மணல் மாட்டு வண்டி மீது துரைமுருகன் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கீழே விழுந்த அவர் மீது மண்ணச்சநல்லூர் நோக்கி வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதி பலி
திருச்சி ரெயில் நிலையம் அருகே காஜாபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் காலை 45 வயதுடைய ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மஞ்சள் நிற அரை கை சட்டை, சாம்பல் நிற வெள்ளை கரை வேட்டி அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து கொட்டப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெயிண்டர் தற்கொலை
திருச்சி தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் அருணாச்சலம். இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணாசலம் நேற்று முன்தினம் காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர் தற்கொலை
புத்தானத்தம் அருகே உள்ள க. மேட்டுபட்டியை சேர்ந்தவர் கதிர்மலை கந்தன் (31). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்மலை கந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






