இந்து முன்னணியினர் உள்பட 4 பேர் கைது
இந்து முன்னணியினர் உள்பட 4 பேர் கைது
கோவை
கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து போலீசில் கூறியதாவது:-
நகைதொழிலாளர்கள்
மேற்கு வஙகாள மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா (வயது 33). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி இருந்து தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் வடமாநிலத்தை சேர்ந்த தன்மையா ஜனா, ஜகாத் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இந்த 3 பேரும் மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் வந்தனர்.
தாக்குதல்
அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கும், 4 வாலிபர்களுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் வாலிபர்கள் 4 பேரும் கவுதம் சியாமல் கட்டுவா, தன்மையா ஜனா, ஜகாத் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அந்த 4 வாலிபர்களும் காந்திபார்க் அருகே பாணிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்து வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் வட மாநில தொழிலாளர்களை தாக்கியது செட்டிவீதியை சேர்ந்த சூர்யா (19), பிரகாஷ் (20),பிரகதீஸ் (21), வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. இதில் சூர்யா, பிரகாஷ் ஆகியோர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரியவந்தது. இந்த நிலையில் தலைமறைவைாக திரிந்த வாலிபர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
---