மனநோயாளிக்கு வழங்கும் மாத்திரையை போதைக்கு பயன்படுத்திய மாணவர்கள் உள்பட 4 பேர் கைது - போலீஸ் நிலையத்தில் செல்பி எடுத்து சிக்கியது அம்பலம்
மனநோயாளிகளுக்கான மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மனநோயாளிகளுக்கான மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்பி எடுத்த மாணவன்
மதுரை மாவட்டம் மேலூர் வடக்கு நாவினிபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் கெவின் (வயது 19), அரசு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் விபத்து வழக்கு தொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரை சந்திக்க வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்து ெவளியே வரும் போது அவர் செல்போனில் செல்பி மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
அதை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் அந்த செல்போனை வாங்கி வைத்து கொண்டு மறுநாள் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். மறுநாள் கெவின் வந்தபோது செல்போனில் அவனது பாஸ்வேர்ட் எண்ணை வாங்கி லாக்கை திறந்து செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, செல்போனில் இருந்த சில புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் கெவின் ஆயுதங்களுடன் இருப்பது, போதை மாத்திரை குறித்து குறுந்தகவல் அனுப்பியது, அது தொடர்பாக செல்போனில் பேசியது என பல்வேறு தகவல்கள் இருந்தன.
மாத்திரை விற்றவர் பிடிபட்டார்
இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை திரட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கெவின் தெரிவித்த இடங்களில் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.
மேலும் போதை மாத்திரை தொடர்பாக புதூர் ராமவர்மநகரை சேர்ந்த மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதி அசார் முகமது(24) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். மனநோயாளிகளுக்கு வழங்கும் மாத்திரையை குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்துக்கொண்டால் ஒருவித போதை கிடைக்குமாம். அந்த மாத்திரைகளை தான் கொடுத்தேன் என்று அவர் கூறி இருக்கிறார்.
மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
அந்த மாத்திரை அளவிற்கு மீறி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து. அதனை வேறு யாரும் விற்பனை செய்ய கூடாது என்றும் தெரியவந்தது. எனவே தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசார்முகமது, கெவின், கல்லூரி மாணவர் கடச்சனேந்தலை சேர்ந்த குமரன்(22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 56 மாத்திரைகள், 3 செல்போன்கள், 150 ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.