கஞ்சா விற்ற வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது
இலுப்பூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து பணி
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதிகளில் பல இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இலுப்பூர் முழுவதும் மாவட்ட சிறப்புப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
4 பேர் கைது
அப்போது இலுப்பூர் கரடிக்காடு அருகே கஞ்சா விற்பனை செய்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 21), மணிகண்டம் தீரன்மாநகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (23), அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (21), இலுப்பூரில் மற்றொரு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணப்பாறை ஏ.புதுப்பட்டியை சேர்ந்த மதியழகன் (53) ஆகிய 4 பேரையும் மாவட்ட சிறப்பு படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், கம்ப்யூட்டர் எடை மிஷின், ரூ.10 ஆயிரத்து 800 ஆகியவற்றை பறிமுதல் செய்து இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.